Home | About us | Isaikethu Ellai | Akkni Kunchuhal | Videos | Lyrics | Pictures | Tamil | Contact us

Lyrics

ஆனந்தம் பொங்கும் திருநாளாம்

இயற்றியவர் - கலைவாணி ராஜகுமாரன்

ஆனந்தம் பொங்கும் திருநாளாம்
ஆகாயம் மண்ணில் வரும் நாளாம்
சோகங்கள் அகன்றிடுமே
ஊர் போகும் வேளை வந்தே -ஆனந்தம்

ஓடிவந்து உயிர் வாடிநின்ற துயர் இன்னும் தாங்கவோ
மூடிவைத்த விதை மழையைக் கண்டபின்னும் மண்ணில் தூங்குமோ
சொந்த மண்ணை காணாது நொந்து மனம் தான் வாட
எந்த சுகம் தந்தாலும் எனக்கது ஈடாமோ
காதல்வேதனையும் தாங்கக்கூடுமடி
வாழ்தலுக்கு ஊர் வாசம் வேண்டுமடி -ஆனந்தம்

தென்றல் வீச புது ஆண்டு வந்ததென உள்ளம் பொங்குதே
எங்கள் வாசலிலே தேனின் வாசனையை பூக்கள் சிந்துதே
வந்து குளிர் நிலவாகி பின்னிரவில கலைந்தோடும்
அந்த சமா தானம்இனி நிலைத்தோங்கி நாம் வாழ
காதல் தேசம் செழித்தோங்க வேண்டுமடி
கானலாகித் துயர் நீங்க வேண்டுமடி -ஆனந்தம்

புத்தம் புது வசந்தம் மண்ணில

இயற்றியவர் - சொர்ணலிங்கம்

புத்தம் புது வசந்தம் மண்ணில்
நித்தம் வந்து பூக்கள் தூவும்
வாழ்வினில் பரவசமே - நாங்கள்
வாழ்வினில் ஒளிபெறவே

கனியும் காலங்கள் கனியும்
கண்ணீரெல்லாம் மறைந்து விடும்
இனியும் ஏனிந்த மயக்கம்
எம் வானில் உதயநிலா
வண்ண வண்ண தாரகைகள்
வந்து வந்து கொஞ்சி நின்று
உயிரை ஊட்டுமே
சின்ன சின்ன பூக்களெல்லாம்
மின்மினி போல் கண்சிமிட்டி
ஊக்கம் அளிக்குமே
ஏம் வாழ்வில் சந்தோசம் தானே நாளும்
ஏம் வாழ்வில் சந்தோசமே - புத்தாடை

மிளிரும் எம்ஈழம் மிளிரும்
ஒற்றுமையாய் உழைத்திடுவோம்
மலரும் ஈழமதில் மலரும்
வானுயர் கோபுரங்கள்
எண்ணி எண்ணி ஏங்கி ஏங்கி
வாழ்ந்து வந்த வாழ்க்கையெல்லாம்
பனிபோல்நீங்குமே
நஞ்சையென்றும் புஞ்சையென்றும்
நாலு வித வேலையென்றும்
ஈழம் செழிக்குமே
எம் வாழ்வில் சந்தோசம் தானே நாளும்
எம் வாழ்வில் சந்தோசமே - புத்தாடை

கடலம்மா கடலம்மா

பாடல்: புதுவை இரத்தினதுரை
பல்லவி

கடலம்மா கடலம்மா
கலங்கிடச் செய்தது ஏனம்மா
ஒருசில நொடியில்
கரையினில் முழுதும்
கரைந்திடச் செய்தது ஏனம்மா

அழகிய வாழ்வை எழுதிய கடலே
ஏனடி அழவைத்தாய் - உந்தன்
மடியினிலேறி மகிழ்ந்தவர் தன்னை
காலடி விழவைத்தாய்.

சரணம்

வெள்ளைமணற் கரையினிலே வாழ்வெழுதும் மீனவர்
வீசுகின்ற காற்றினிலே பாய்விரித்துப் போனவர்
கொள்ளையழ கோடுனக்கு கோடியுற வானவர்
கோலமழித் தாடிவிட்டு நீஉறங்கப் போனியோ?

தாயென எம்மைத் தாங்குவாயென்றே
கரைவாழ்ந்தோம் - எங்கள்
தாய்மடி கூடச் சாதருமென்றா
எதிர்பார்த்தோம்.

சின்னமணித் தீவினிலே வந்துஇடி வீழ்ந்தது
சீறிவந்த அலைகளெங்கள் வாழ்வையள்ளிப் போனது
நேற்றுவரை கால்களிலே முத்தமிட்ட அலைகளே
இன்றுநெருப் பாகநின்று சுட்டதென்ன உயிரிலே

வலையதுமில்லை படகதுமில்லை
வாழ்வதும் இல்லையம்மா - கடல்
முலையினில் உண்ட பாலதுமந்த
அலையுடன் போனதம்மா.

காதலே ஜீவிதம

பாடல்: புதுவை இரத்தினதுரை

காதலே ஜீவிதம்
காதலே சோபிதம்
காதல்தானே பரிபூரணம் - வாழ்வில்
காதலே தோரணம்

பல்லவி

பூக்களைக் கேட்டுப்பார் காலையிலே - சின்னப்
பொன்வண்டைக் கேட்டுப்பார் ராவினிலே.
காதலிக்கச் சொல்லிச் சொல்லி காதிற் சொல்லும் - எந்தக்
காலத்திலும் காதல் தானே வெல்லும் வெல்லும்.

காதலில்லை யென்றால் கானமில்லை இல்லை
கவிதையில்லை இல்லை - வண்ணக்
கனவுமில்லை இல்லை
காதலிலை யென்றால் காற்றுமில்லை இல்லை
மழையுமில்லை இல்லை - ஒரு
அழகுமில்லை இல்லை.

சரணம்

கனவில் சிரித்து நினைவில் துடித்து
கருகி மகிழும் காலம் இது
கவிதை எழுதி இதயம் மெழுகி
களவு பழகி வாழும் நிலை
காதலென்றால் மேனிமீது காமமில்லை - எந்தக்
காலத்திலும் காதலது சாவதில்லை.
காதலென்று சொன்னால் வெறும் போகமில்லை இல்லை
போகமுள்ளதென்றால்; காதல் உண்மை இல்லை இல்லை.
காதலென்பதெல்லாம் ஒரு தேவநிலை நிலை - யாரும்
காதலித்துக் கொண்டால்; அது பாவமில்லை இல்லை.

கண்ணுக்குள் நீயா வந்தது

பாடல்: சொர்ணலிங்கம

கண்ணுக்குள் நீயா வந்தது -காதல்
நெஞ்சுக்குள் நீயா சொன்னது
உன்னெண்ணம் என்னைக் கொல்லுதே – அன்பே
இன்னும் நீ அங்கே நிற்பதேன் - கண்ணுக்குள்

பாலாடை பின்ன மேலாடை கெஞ்ச
தேனாற்றில் நான் நனைந்தேன்
கண்ணாடி வளையல் கையோடு நொருங்க
என்னோடு நீயிணைந்தாய்
காதல் இதுவா தளிர் மேனி சிலிர்த்தேன்
மீறி அணைத்தாய் தடுமாறி வீழ்ந்தேன்
என்னை நான் இழந்தேன்
தென்றல் காற்றில் பட்ட மேனி
பெண்மை பெண்மை என்றது
காதலொன்று தானே வாழ்வில்
உண்மை உண்மை என்றது
இளமையில்தானே இன்பம் வரும் - கண்ணுக்குள்

கண்ணாடிக் கன்னம் பொன்னான அங்கம்
என்னோடு சேராதோ
மையோடு கொஞ்சும் பொய்பேசும் கண்கள்
தானாக மூடாதோ
பூவை வந்தாய் பொன்மேனி கொண்டு
போதை தந்தாய் பூவே நான் வண்டு
ஆசைத் தீ மூட்டினாய்
மணமேடை தனைத்தேடி
நடைபோடும் இன்பத்தேவி
இடையோடு இலைபோட்டு
பரிமாறும் எந்தன் ஆவி
பொன்னூஞ்சல் ஆடி எனைச் சேரன்பே - கண்ணுக்குள

இறைவனின் கருணையில் நான் பிறந்தேன

பாடல்: சொர்ணலிங்கம

இறைவனின் கருணையில் நான் பிறந்தேன்
இசையெனும் சோலையில் நான் தவழ்ந்தேன்
குயிலிடம் நான் தினம் கானம் பயின்றேன்
கூவிடும் குயிலாய் நான் வளர்ந்தேன்

இசையே உயிரே
அழகே என் மடிமேல் வா

தமிழே என் உயிரல்லவா
இசையே என் மூச்சல்லவா - இறைவனின்

வாழ்வின் சுகங்கள் ஏது ஏதுமின்றி
நாளும் பொழுதும் ராகம் ரகமென்றே
அலைந்தேன் அலைந்தேன் இசைபாட

காலம் ஒருநாள் மாறும் மாறுமென்
பாடல் அரங்கில் ஏறும் ஏறும் என்
ஆசைக் கனவு நனவாகும் நாளேது

இனமே நான் சேயல்லவா
அருகே நீ வா என்றென்றும் தாயல்லவா - இறைவனின்

ஏனோ என்முகம் யாரும் காணவில்லை
பாடும் ராகம் காதில் கேட்கவில்லை

இசையே ஒருவன் தனிச் சொத்தா
மாற்ஹ்ன் மல்லிகை வாசம் வீசுமா
வீட்டில் பூத்தால் நாற்றமாகுமா
பாடப் பாட புது ராகம் பிறக்காதா

இனமே நான் சேயல்லவா
அருகே நீ வா என்றென்றும் தாயல்லவா - இறைவனின்

விதைகள் யாவும் முளைப்பதில்லை

பாடல்: கலைவாணி இராஜகுமாரன்

விதைகள் யாவும் முளைப்பதில்லை
விண்மீன் யாவும் ஒளிர்வதில்லை
விடிந்தும் சிலநாள் வெளிச்சமில்லை
விழி கலப்பார் சிலர் இணைவதில்லை

கால நதிக்கரையோரத்திலே இரு
கால்கள் நனைத்தொரு நாள் நடந்தேன்
ஆழத்திலே ஒரு குரல் கேட்டேன் -மனம்
மீளத் துளிர்த்திட நடை போட்டேன்

ஆழத்தில் ஓடிடும் நீரானாய்- எந்தன்
அடிமனசுள் நிகழ் போரானாய்
ஊருக்கு உன் முகம் தெரியாது- நம்
உறவெனும் கவிதையும் புரியாது

கண்ணோடு கலந்து பேசியே வதைத்தாயே எனைத்தானே

பாடல்: நிலா குகதாசன்

கண்ணோடு கலந்து பேசியே வதைத்தாயே எனைத்தானே
காணாமல் போனதேன்
காதல் தந்த சோகம் வாடுதே மனம்
அன்புத்தேவன் எனைத்தானே தினம் தேடுதே மனம்
எனையே மறந்தே நீ தூரம் போனதேன் - கண்ணோடு

ஆதவன் ஒளியும் கறுத்திடுமா அல்லியை நிலவும் வெறுத்திடுமா
நீரலை மோதி மீன் அழுமா நெருப்பென்று சொன்னால் வாய் சுடுமா
கண்கள் வழி பார்;த்து தினம் கானலானதே
நெஞ்சம் உனை எண்ணி நிதம் நெரிந்து போனதே
போதும் இந்த வே~ம் பொய்மை காதலே
எனையே மறந்தே நீ தூரம் போனதேன் - கண்ணோடு

பூவினம் வண்டை மறந்திடுமா பொய்கையும் நீரை துறந்திடுமா
பால் நிறம் கறுப்பாய் மாறிடுமா பாலையில் சோலை தோன்றிடுமா
பாதை தவறாக ஒரு பயணம் போகிறேன்
சோகம் எனும் தீயில் நிதம் வைந்து சாகிறேன்
தேவை உந்தன் பார்வை உனைத் தேடி வாடினேன்
எனையே மறந்தே நீ தூரம் போனதேன் - கண்ணோட

வானிடிந்து வீழ்ந்ததுவோ அந்த சூரியனே வீழ்ந்தானோ

பாடல்: சொர்ணலிங்கம்

வானிடிந்து வீழ்ந்ததுவோ அந்த சூரியனே வீழ்ந்தானோ
ஆகாயம் தரைபாய்ந்து நெ;த ஆழியலை வந்ததுமேன்
ஊரெல்லாம அழிந்ததுமேன் எங்கள் உயிர்ப்பலிகள் போனதுமேன்
கோடான சொத்துக்களை நீகூட்டியள்ளி போனதுமேன்

கடல்தாண்டி வந்த அலை துன்பங்களை தந்த அலை
வினையாக வந்த அலை வேதனைகள் தந்த அலை
வாழ்வையள்ளி போன அலை - கடல்தாண்டி

நேற்றுவரை வாழ்ந்த ஆசைவீட்டை இங்கு நான் காணவில்லை
கூடத்திலே ஓடி விளையாடிய என் சேய்கள் எங்கே
கால்தழுவிச்செல்லும் அலையே காவு கொள்ள ஏன் நினைத்தாய்
நாள்முழுதும் கடலே உன் மடிமேல் இருந்தேனே
ஓங்கி அலைவீசி எங்கள் உயிரை நீ ஏன் பறித்தாய்

தாலி பத்துப் பவுணில் பட்டுச் சேலை என நான் வாங்கி வைத்தேன்
ஆசைமகள் வாழ நாள் பார்த்து நான் காத்திருந்தேன்
காலன் ஏன் வந்தான் கடல் அலையாய் என் வீடுதேடி
கோரமாய் என்குடும்பம் பலிகொண்டாய் எனை ஏன் விட்டாய்
தாளாத சோகம் இனி மீளும் ஒரு நாள் வருமோ - கடல்தாண்டி

நிலவும் வானும் பிரிந்திருந்தால்

ராகம் - ஹிந்தோளம்
வரிகள் - கலைவாணி ராஜகுமாரன்

நிலவும் வானும் பிரிந்திருந்தால் அழகேதடி
நீயும் நானும் ஒன்று பெண்ணே விலகாதேடி - நிலவும்

தென்றல் வந்து தீண்டத்தானே மரம் பேசுது - அடி
திரியை தீயும் தீண்ட ஒளி வீசுது

நிலவும்

சொல்லில் சுருதி கலந்தால்தானே இசையாகுது
கல்லில் உளியும் பேச சிலையாகுது
பிறக்கஇறக்க தனிமைபோதும் பேதைப்பெண்ணே
வாழும்போதுஉறவு வேண்டும் கண்ணே -நிலவும்

பிரம்மனோடு செவ்விகாண வேண்டும்

ராகம் - கீரவாணி
வரிகள்- கலைவாணி ராஜகுமாரன்

பிரம்மனோடு செவ்விகாண வேண்டும் - அவள்
பிறப்பின் ரகசியம் அறியவேண்டும் - அவன்
கரங்களைப் பற்றி கண்களில் ஒற்றி
வரமிவள் என்றுநான் உருகவேண்டும் - பிரம்மனோடு

விடியலின் அழகிவளோ இளவேனில் மகளிவளோ
இசையெனும் தேனமுதோ இன்பம் என்ற சொல்லிவளோ
கவிதைக்கு தாயிவளோ கற்பனைக்கே உயிரிவளோ
கனவுக்கே கனவிவளோ காதல் மகள் யாரெவளோ? - பிரம்மனோடு

சங்கீத சாகரத்தின் சாதனைதான் இவள் குரலோ
என் ஜீவ ராகங்களின் இருப்பிடமே இவள் விழியோ
தாளலயம் தவறாத சந்தமிவள் இடைதானோ
சாரீரம் எட்டாதசங்கதியும் இவள்தானோ? - பிரம்மனோடு

பூக்களைத் தொட்டவுடன் பூமிக்கு வந்தவளோ
பாக்களை கலந்தொருநாள் படைத்திட்ட பாமகளோ
சந்தோஷக்கணமொன்றில் வந்துதித்த கற்பனையோ
என்தேவியாகவென்றே இறங்கிவந்த பொற்சிலையோ? -பிரம்மனோடு

வாழ்க்கையென்பதென்ன

ராகம் - மதுவந்தி
வரிகள் - கலைவாணி ராஜகுமாரன்

வாழ்க்கையென்பதென்ன
கனவின் தொகுப்பா கடலில் உப்பா
வாழ்க்கையென்பதென்ன
மரணமா ஜனனமா இரண்டினும் வழி இதுவா

காதல் என்பதென்ன
உயிரை கொடுக்குமா உயிரை குடிக்குமா
காதல் என்பதென்ன
அமுதமா துயரமா இரண்டுமே கலந்ததுவா

மரணம் என்பதென்ன
விதியின் சிரிப்பா பிரிவின் நெருப்பா
மரணம் என்பதென்ன
முடிவதா தொடர்வதா உயிருக்கு விடுதலையா?

கண்களுக் காயிரம் காரணம் சொல்லியே

ராகம்: பாகேஸ்வரி
வரிகள்: கலைவாணி ராஜகுமாரன்

கண்களுக் காயிரம் காரணம் சொல்லியே
சென்றது நாள் நூறடி - அவன்
கண்மறைந்தான் காத்திருந்தேன்
பெண் மறந்தானடி திரும்பவில்லை

காதலின் மேலடி சாவதன் நோ என்பேன்
காவிரிபோல் விழி பாயுதடி
ஆயுள் வதைபோல் ஆனதென் நெஞ்சம்
துளியாய் துளித் துளியாய் உயிர் தானாக போகும் வரும் - கண்களுக்

போய்வருவேனெனப் போனவன் காலடி
பேய்மழையாலது அழிந்ததடி
காலடிபோல் எந்தன் காதலும் இல்லை
அழிந்தால் விழி வழிந்தால் அது மீளாது நாளும் தேயும் - கண்களுக்

காதலின் வேதனை யாரறிவாரடி
காலமும் ஓரிடம் நின்றதடி
கானல் அலைமூடும் சாலையைப் போல
தெரிந்தான் முகம் மறைந்தான் கை நீளாத தூரம் போனான் -கண்களுக்

மெல்லக் கசிந்தது புல்லாங்குழலே

ராகம்- மிஸ்ரகமாஸ்
வரிகள்- கலைவாணி ராஜகுமாரன்

மெல்லக் கசிந்தது புல்லாங்குழலே
மேவி இசைத்தது கொல்லைக்குயிலே
கொல்லவென ஒரு குண்டு வெடித்ததே
கொல்லைக்குயிலோடுயிரும் போனதே

போரற்ற புது வாழ்வு வேண்டும்
புயலோய்ந்து பூந்தென்றல் வேண்டும்

பிள்ளை சிரித்தது சங்கீதமாய்
பூமி சிலிர்த்தது சந்தோஷமாய்
மெல்லப் பதுங்கி சாவு தொடர்ந்ததே
பிள்ளைச் சிரிப்போடுலகும் போனதே

போரற்ற புது வாழ்வு வேண்டும்
புயலோய்ந்து பூந்தென்றல் வேண்டும்

மனிதம் வளர்ப்பது நல் தேசமா
மதம் கொண்டழிப்பதே முன்னேற்றமா
இல்லைப் பிரிவுகள் என்றினி வருமோ
தொல்லை களைந்தென்று மானுடம் எழுமோ

போரற்ற புது வாழ்வு வேண்டும்
புயலோய்ந்து பூந்தென்றல் வேண்டும்

பெண் என்பவள் கவிதை

ராகம்: சண்முகப்பிரியா
வரிகள்: கலைவாணி ராஜகுமாரன்

பெண் என்பவள் கவிதை
ஆனாலென்ன அடிமை
ஆணை அவள் தான் தாங்கினாள்
ஆணைகளும் தாங்கும் நிலை என்று மாறும்

வானிலேறி நிலவோடு பேசும் பெண்ணை போற்றி போற்றி புகழ்வார்
ஆணினால் உலகம் ஆனதென்றிவர்கள் வீட்டினிலே இகழ்வார்
அவளொரு சகவுயிர் என உணர் நாளெது - பெண் என்பவள்

பெண் என்பதே பெருமை
ஆனாலெங்கே உரிமை
இரவில் அழுது முடிப்பாள்
பகலில் தொழுது கிடப்பாள்
காலம் காலம் பல காலமாக பெண்ணை காப்பதாக உரைப்பார்
காலை மாலையென வேலைசெய்யும் பெண்ணை கணக்கினில் யாரெடுத்தார்
சதிகளே விதியெனும் சரித்திரம் மாறணும் - பெண் என்பவள்

பெண் என்பவள் கடவுள்
பேசாள் அவள் இருளில்
உடலைப் பிழிந்து தருவாள்
உயிரைக் கருவில் சுமப்பாள்
மேடையேறி பலர் கூடும் மன்றங்களில் வேண்டும் புதுமையென்குவார்
பாரதி அவனின் பாடல் தானுயிர்ந்த பாதையென்றே மொழிவார்
நாளைகள் அவளது நாளாக மலரணும் -பெண்என்பவள்

இசையெனும் மழைதனில் நனைகிறதே - மனம்

ராகம்: கல்யாணி
வரிகள்: கலைவாணி ராஜகுமாரன்

இசையெனும் மழைதனில் நனைகிறதே - மனம்
இது பெரும் சுகம் எனக் குழைகிறதே

இமைகளின் திரை விழ கனவுலகே - அதில்
இணையுதே என் மனம் இசையினிலே

மழைச்சாரல் போல்பாடல் தனிசுகமே - அதில்
மயங்கினால் செவியினுள் புது உலகே
சுகம்போல ஒரு சோகம் தொடுகிறதே - அந்த
சுவையோடுஉயிர்போகதுடிக்கிறதே

பூ விரிந்து கிடக்கிறதே முற்றத்திலே

ராகம்: கல்யாணவசந்தம்
வரிகள்: சேரன்

பூ விரிந்து கிடக்கிறதே முற்றத்திலே
போய் அணைக்க எங்களிடம் கையில்லையே
பாடல் ஒன்று அலைகிறதே காற்றினிலே
கேட்பதற்கு எங்களிடம் காதில்லையே

ஆகாயம் நடந்து செல்ல ஆசை உள்ளதே
ஆனாலும் எங்களிடம் கால்கள் இல்லையே
போகாத புதியவழிப் பாதை உள்ளதே
போகையிலே கூடவர யாருமில்லையே

கண்ணிவெடி பட்டதிலே கால்களிழந்தோம்
மின்னலடித் தாக்குதலில் வீட்டை யிழந்தோம்
மண்ணிழந்த சோகத்திலே பாடல் மறந்தோம்
மற்றவர்கள் நாட்டினிலே அகதிகள் ஆகிவிட்டோம்

ஈரத்தில் மலர்ந்திருக்கும் கண்ணகளுடனே
காலத்தை வெல்லஒரு கதை சொல்லுவோம்
கூடிழந்தோம் என்றாலும் வேரிழப்போமா
குளிரில்உறைந்தாலும்வாழ்வைகாதலிப்போம்

மறந்து போகுமோ மண்ணின் வாசைன

ராகம்: மிஸ்ரசிவரஞ்சனி
வரிகள்: கலைவாணி ராஜகுமாரன்

மறந்து போகுமோ மண்ணின் வாசைன
தொலைந்து போவமோ தூரதேசத்தில்

வேப்பமரக்குயிலே என் வீடு இன்னும் இருக்கிறதா
ஏக்கமுடன் நீபாடும் ஒத்தைக்குரல் ஒலிக்கிறதா?
மேப்பிள் மரநிழலோரம் மெல்ல விழி மூடுகையில்
கேட்குதடி உன்பாடல் தேம்புதடி என்னிதயம் - மறந்து

காலையிலே கண்விழித்தேன் காணவில்லை என்முகத்தை
சாலையிலே தொலைத்தேனோ வேலையிலே அழித்தேனோ?
தேடுகின்றேன் தேடுகின்றேன் தேடல் இன்னும் ஓயவில்லை
வாடுகின்றேன் ஊர் நினைவில் வாழ்க்கையென்று ஏதமில்லை - மறந்து

வந்தஇடம் ஒட்டவில்லை வாழ்நிலமோ கிட்டவில்லை
சொந்தங்களோ பக்கமில்லை சொல்லியழ நேரமில்லை
இந்தநிலை மாறிஎங்கள் சொந்தமண்ணை சேர்வதெப்போ
அன்னை நிலம் முத்தமிட்டு அழுது துயர் தீர்வதெப்போ -மறந்து

கண்களால் எழுதிடும் கவிதையே காதலோ

ராகம்: கௌரிமனோகரி
வரிகள்: கலைவாணி ராஜகுமாரன்

கண்களால் எழுதிடும் கவிதையே காதலோ
கருத்தினால் இதயங்கள் கலப்பதே காதலோ
பெண்களின் அழகினால் பிறப்பது காதலோ
பிரிந்தபின் நினைவொடு வாழ்வது காதலோ

இரவும் பகலும் உரசும் பொழுதில்
இறங்கியதே மண்ணில் ஈரம்
அந்த மழையின் அழகிடை தெரிந்த விழியால்
ஏறியதே நெஞ்சில் பாரம்

ஜன்னலின் ஓரம் பார்த்திருந்தேன் - என்
ஜன்மங்கள் ஏழும் காத்திருப்பேன் - இரவும்

உள்ளே உலவும் கவிதைபோலே
உள்ளே விழியால் இறங்கிவிட்டான்
முள்ளாய் பூவாய் அவனின் நினைவு
உறுத்தும் இனிக்கும் அது ஏனோ - இரவும்

மலையைத் தழுவும் மேகம் போலே
மனசைத் தழுவி விரைந்துவிட்டான்
வலியாய் சுகமாய் வளரும் போழுது
வருத்தும் இனிக்கும் அது ஏனோ - இரவும்

காதலா இது அஞ்சுகின்றேன்
கைதொட கரைந்தால் என்ன செய்வேன்
நட்பாய் இருந்தால் அதைநான் அறிவேன்
நட்பில் துயரே இல்லையடி - இரவும்

ஏதெனவே ஒரு இலக்கணத்துள்
இருவிழிச் சாரலை அடக்கிவிடு
வேதனை தீர்ந்து போகும் ஆனால்
வேதனை எனக்கு வேண்டுமடி -இரவும்

மழைபெய்த நாளொன்றில்

ராகம்: ஆகிர்பைரவி
வரிகள்;: செழியன்

மழைபெய்த நாளொன்றில் கிளைவிட்டு பிரிகின்ற
ஆழகான இலைபோல தனியாக அழுகின்றதே
தனியாக அழுகின்றதே - மழை

பொல்லாத நிலவொன்று முகங்காட்ட மறுத்திங்கு
பகலாய் எரிகின்றதே பகலாய் எரிகின்றதே
கண்ணீரில் மூழ்கின்ற அதிகாலைச் சூரியன்
குளிரால் உறைகின்றதே- பெரும்
குளிரால் உறைகின்றதே - மழை

மழைவந்து மண்மீதும் பனிவந்து புல் மீதும்
அழகை எழுதட்டுமே - வாழ்வின்
அழகை எழுதட்டுமே
சொல்லாத துயரங்கள் எல்லார்க்கும் உண்டென்ற
உயர்வை சொல்லட்டுமே
உயர்வை சொல்லட்டுமே - மழை

துயரங்கள் போவென்று நிலம்விட்டு நிலம் வந்தும்;
துயராய் வழிகின்றதே - வாழ்வு
துயராய் வழிகின்றதே
பனியாய் உருகும் இவ் துயர் சூழ் வாழ்வை எம்
மனமே வெல்லட்டுமே - உன்
மனமே வெல்லட்டுமே

ஒன்பது நாளும் ஒரு சிறு முத்தமும்

ராகம்: அமீர்கல்யாணி
வரிகள: சரன்

ஒன்பது நாளும் ஒரு சிறு முத்தமும்
இன்றிராப் பொழுதுடன் முடிந்ததோ?
எந்த நாள் உன் சிறு காந்தள் விரல்களில்
என் முகத் தாமரை மலருமோ - ஒன்பது

இடையிருந்த சிறு கூறை கனவினிலே அதிர்கிறதே
நிலம் பிளந்த நீரூற்றில் பெரும் காற்று சுழல்கிறதே
அடிமடியின் மயிர்க்கால்கள் புயல் கிழம்பிச் சிலிர்க்கிறதே
ஏழு கடல், ஏழு நிறம், ஏழு ஸ்வரம் இசைகிறதே - ஒன்பது

புரிந்திருந்தேன் சிறுபோது பிரிந்திருந்தேன் ஒருபோது
தரிப்பிடங்கள் இல்லாமல் தனிக்காற்றாய் அலைபவள் நான்
பிணைந்திருக்க காற்கூறு, பிரிந்திருக்க அரைக்கூறு
பிற்கூறு முழவதுமே எரிகின்றேன், என் கவியில் - ஒன்பது

கதைகளிலே இருந்ததெல்லாம் வாழ்க்கையிலே மலர்கிறதே
வாழ்க்கையிலே மலர்ந்ததெல்லாம் கற்பனையில் எழுகிறதே
அடிமடியின் மயிர்க்கால்கள் புயல் கிழம்பிச் சிலிர்க்கிறதே
ஏழு கடல், ஏழு நிறம், ஏழு ஸ்வரம் இசைகிறதே -ஒன்பது

எப்படி கடந்து போனாய்

ராகம்: ஆபேரி
வரிகள்: சேரன்

எப்படி கடந்து போனாய்
ஒரு சிறு பார்வையும்
திருப்பி தராது - எப்படி

தீரா இரவே மூளா நெருப்பே
தொடர்கையில் படர்கையில்
விரகம் விரிய விரிந்த நாள் எல்லாம்
தெருப் புழதியிலா தூர இருளிலா - எப்படி

எப்படி தொலைந்து போனேன்
என் கனவோடு தீர்ந்த
சிறகுகள் எரிய - எப்படி

சொல் தரும் போதையில் சுழன்றே சுழன்று
அழுகையில் எழுகையில்
மெல்லத் தணிந்தே அணைந்து போவது
காதலின் குரலா கானல் மான்தானா? - எப்படி

ஒரு கணப் பொழுதே தூரம் என்று
இருந்த நாள் எரிந்த நாள்
விரகம் விரிய விரிந்த நாள் எல்லாம்
தெருப் புழதியிலா தூர இருளிலா -எப்படி

இசையே உனைப்போல்

ராகம்: சிம்மேந்திரமத்திமம்
வரிகள்: கலைவாணி ராஜகுமாரன்

இசையே உனைப்போல் துணை ஏது
வேறெதற்கும் இதயம் பணியாதே - இசையே

அசையா மலையும் அடங்கா மனமும்
வசம் ஆக்கிடுவாய் ஒலி தேவதையே - இசையே

கானல் நீரோ வாழ்க்கை என்றேன்
காதல் செய் நீ என்னை என்றாய்
ஏனோ எல்லாம் பொய்மை என்றேன்
இசை நான் தூய்மை என்றே சொன்னாய் - இசையே

துயரம் இருளாய் சூழும் வேளை
சுடராய் ஒளிர்வாய் துயர் களைவாய்
தனிமை சிறையில் தவிக்கும் வேளை
தளிராம் குரலால் எனை நீ தொடுவாய் - இசையே

உலகம் இனியேன் பிரிவேன் என்றால்
இசையே எனக்காய் இருப்பாய் என்றாய்
உறவே உணர்வே ஒலியின் அழகே
உனை நான் பிரிந்தால் உயிரைப் பிரிவேன் -இசையே

வெள்ளி குளிக்கும்

ராகம்: பாகேஸ்வரி
வரிகள்: சேரன்

வெள்ளி குளிக்கும் மேற்குக் கடலுக்குள்
சந்திர சூரியர் தூங்கப் போனார்
சொல்லத்தெரியாத சோகம் எழுந்தது
சோளகக் காற்றுடன் ஆடி அலைந்தது

வாசலில் ஆடிடும் மாவிலை தோரணம்
வேலியில் காய்கிற வீச்சு வலை
வீசா காற்றில் மேலும் கீழும்
ஓங்கி நடுங்கி அசைகிறது - வெள்ளி

காற்று வெளியிலே காலம்; தந்த
காவியம் ஆயிரம் சொல்லுகிறோம்
மீட்டிய பாடலில் மோகனம் இல்லை
மௌனத்தின் காலடி கேட்டு நின்றோம் - வெள்ளி

நட்சத்திர ஒளி தீபம் ஏற்றிச்
சுடராய் எரியும் ஓர் பின்னிரவு
நூறு செஞ்சூரிய ஒளிக்கரம் தாங்கிப்
புலரும் காலைக்கு வழியாகும் -வெள்ளி

பொழுதாகில் இருள்மூடி

ராகம்: ஹம்ஸானந்தி
வரிகள்: புதுவை இரத்தினதுரை

பொழுதாகில் இருள்மூடி விரியும் - என்றோ
ஒருநாளில் உயிர்யாவும் பிரியும்
அழகான உடல்கூட எரியும் - எமன்
கயிறோடு வரஞானம் புரியும்.
உடல் வாடை வீடு
உனக்கேது கூடு - இது
உயிர் போகும் வரைதானே
விளையாடும் மேடு

எனதென்றும் உனதென்றும் விலைபேசுறாய் - காம
இழையங்கள் எரியூட்ட உலையாகிறாய்.
கனவொன்றில் நெடுநாளாய் விழிமூடுறாய் - உயிர்
கரைகின்ற போதேநீ வழிதேடுறாய்.
அவன்போடும் கோடு
அதிலேறி ஆடு - அட
விதிகீறும் வரைகோடு
எரியாத ஏடு.

உயிர்போகும் வரைநின்று கூத்தாடுறாய் - தெய்வ
உறவின்றி பொய்யாக வேர்த்தாடுறாய்
உலகேழும் உனதன்றா நீபாடுறாய் - உன்
உயிர்கூட உனதில்லை எதைத்தேடுவாய்.
அவன்போடும் கோடு
அதிலேறி ஆடு - அட
விதிகீறும் வரைகோடு
எரியாத ஏடு.

தீர்ப்பு எழுது

ராகம்: சிவரஞ்சனி
வரிகள்: புதுவை இரத்தினதுரை

தீர்ப்பு எழுது - உலகே
தீர்ப்பு எழுது - நாங்கள்
பார்த்துப் பார்த்துக் காத்திருக்கோம்
தீர்ப்பை எழுது.

சரணம்
ஈழத்தமிழன் வாழஏதும் வழிகளில்லையா? - இன்னும்
ரத்தம்சிந்த விடுதல்பெரிய பழிகளில்லையா?
சாகவென்று பிறந்துவந்தோன் ஈழத்தமிழனா? - எங்கள்
சந்ததியும் எம்மைப்போல நாளைஅழுவனா?

உலகமெங்கும் வாழும்ஈழ உறவின் வேர்களே - எங்கள்
உரிமைக்காக எழுகஉங்கள் தெருவில் தேர்களே
அழகுபூத்து விடியும்நாளை தமிழர் தேசமே - என்று
அறியவேண்டும் உலகமெங்கும் தமிழர் தாகமே

எமதுதேசம் எமதுகையில் வந்து சேரணும் - கொடி
ஏற்றிவைத்த மகிழ்வினோடு நாங்கள் சாகணும்
புதியவாழ்வு மலர்ந்ததென்று குயில்கள் கூவணும் - புலம்
பெயர்ந்துபோனஉறவுயாவும்திரும்பிமீளணும்

மலர்ச் சோலையாய் நீ மாற

ராகம்: கானடா
வரிகள்: சொர்ணலிங்கம்

மலர்ச் சோலையாய் நீ மாற வேண்டும் - தேன்
வண்டாகி உனைத் தீண்டி சுகம் பெற வேண்டும்
பாடிடும் குயிலாய்நீ பறந்திட வேண்டும் -
நாளும் உன் நாவில் நான் வாழவேண்டும் - மலர்

விடியா இரவாய் நீ இருந்தால்;
முடியா கனவாய் நான் தொடர்வேன்
புலரா பொழுதாய் மாறினால்;
மறையா நிலவாய் நான் வருவேன்
ஓடிடும் மேகமாய் நீ நகர்ந்தால் - அதில்
ஒளிந்திடும் நிலவாய் நான் நான் தொடர்வேன் - மலர்

கார்மேகம் என்றால்; மயிலாவேன்
அதிகாலை கூவும் குயிலாவேன்
காலைப் பனியாய் நீ பொழிந்தால்
தூங்கும் செடியாய் நான் நனைவேன்
கடற்கரை மணலாய் நீ காத்திருந்தால்
மோதிடும் அலையாய் நான் உனைத்தொடுவேன்
என்றும் நான் உன்னோடு கலந்திட வேண்டும்
நீயென்றும் நானென்றும் பிரியாது வேண்டும் -மலர்

வானில் முகிலோடும்; மாம்பூவில்

ராகம்: பிருந்தாவனி
வரிகள்: செழியன்

வானில் முகிலோடும்; மாம்பூவில் குளிர் வீசும்
நெஞ்சில் நிழலாடும் விழிநீரில் முகம் தோன்றும்
சொல்லாமல் பிரிந்த காலங்கள் தோறும்
யார்மீது யார் கோபம்.

மூங்கில் இலைமீது பனிக்காற்று வந்தாடும்
முகில்கள் மனம்மாறி மழைநீராய் தானாகும்
காலம் இலைமீது அழகாக நிறம் பூசும்
காலம் இலைமீது அழகாக நிறம் பூசும்
வேம்பின் கிளைமேல் கூவும் குயிலோ நின்று துயர்பாடும்
சொல்லாமல் பிரிந்த காலங்கள் தோறும்
யார்மீது யார் கோபம்.

சொல்லா சமயத்தில் விழிநான்கும் இடம் சேரும்
நினைவில் உயிரான கதை கண்ணீர்த் துளியாகும்
புல்லின் விழி நீரும் காற்றோடு கரைந்தோடும்
புல்லின் விழி நீரும் காற்றோடு கரைந்தோடும
தெரியா மனிதர் போலெம் காலகள்; நீண்டு வழிபோகும்
சொல்லாமல் பிரிந்த காலங்கள் தோறும்
யார்மீது யார் கோபம்.

இசையைப்பாட அருளிய

மங்களம்

ராகம்: மத்தியமாவதி
வரிகள்: சொர்ணலிங்கம்

இசையைப்பாட அருளிய இறைவா உமக்கு நன்றி சொன்னோம்
இசையை கேட்டு ரசித்த மாந்தர் உமக்கு நன்றி சொன்னோம்
ஏழு ஸ்வரத்தில் இனிய இசையை உமக்கு எடுத்து வந்தோம்
நாளை இந்த இசையை தேடி வருவீர் நம்புகின்றோம்
இசைக்கு ஏதுஎல்லை - எம்
செவிக்கு சேதி சொல்லும்
வாழ்க தமிழிசை
வாழ்க தமிழ் மொழி

 

பனிப்பாலை வெளி

ராகம்: மலயமாருதம்
வரிகள்- கலைவாணி ராஜகுமாரன்

பனிப்பாலை வெளி வெறுத்து ஊரேகினோம்
இனித் துயர் இல்லையென்று வேரேகினோம்
இனிதாகும் தாய்மண்ணே எனநாமும் மகிழ்ந்தாட
இடிபோல போர் வந்தால் என்ன செய்வோம் - மீண்டும்
இடி போலப் போர் வந்தால் என்ன செய்வோம் - பனி

அழகான ஒரு வீடு கவிபாட சிறுமாடம்
கனவோடு எமதூரில் கட்டிவைத்தோம்
நிலவோடு கதைபேசும் நினைவோடு இருந்தோமே
நெருப்பாகித் தகித்தால் நாம் என்ன செய்வோம்
நெஞ்சில் உருவான கவிதை வரியாக
முன்னம் கண்ணீரில் அழிதல்போல்
அலையில் துரும்பாக புயலில் சருகாக
அலையும் வாழ்க்கை இது முடியாதா? - பனி

இருளோடு பயம் சூழ இதயத்தில் தீ மூழ
இருப்பின்மேல் வெறுப்பாகித் தீய்கிறதே
சிறைபட்டு வதைபட்டு சிதைமூட்ட உடலின்றி
ஊர்கூடி அழும் ஓசை ஒலிக்கிறதே
நெஞ்சில் உருவான கவிதை வரியாக
முன்னம் கண்ணீரில் அழிதல்போல்
தினமும் சாவோடு வாழும் நிலைமாறி
தென்றல் பூந்தென்றல் வீசாதா? - பனி

நாடோ டிகள் போல நாள்தோறும் அலைமோத
விதியே நாம் இழைத்திட்ட பிழையென்னவோ
மடிமீதிலே வாழ வழியில்லையே மீண்டும்
துருவத்தின் திசையெல்லாம் தொலைந்தே போவோம்
நெஞ்சில் உருவான கவிதை வரியாக
முன்னம் கண்ணீரில் அழிதல்போல்
உலகின் திசையாவும் விழுது எறிந்தாலும்
வேர்கள் உன்மண்ணில் என் தாயே -பனி

மூங்கில்கள் நிழலிடும்

ராகம்: காப்பி
வரிகள்: மைதிலி

மூங்கில்கள் நிழலிடும் முற்றமது -
மோனத்துள் திளைக்குதென் சித்தமது
நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே - அதன்
நினைவினில் குழையுதே நெஞ்சமது - மூங்கில்கள்

பார்க்க முடியா பழ நெடு மரத்தை
பாதையை நிறைத்த பசுமை வெளியை
கூட்டினுள் குழைந்த குரலின் வனப்பை
கூதலில் அலைந்த குழந்தைகள் சிரிப்பை
கேட்டிருந்தோம் அந்த வீட்டினிலே
நினைக்கையில் நிறையுதே நெஞ்சமதே - மூங்கில்கள்

காற்றினில் அலைந்த கனவின் ஒளியை
கன்னத்தை நனைத்த கண்ணீர் துளியை
வேதனை விம்மலை நீண்ட நினைவை
வலி மிகுந்தாலும்; வாழ்வின் சுமையை
சுகித்திருந்தோம் அந்த வீட்டினிலே
நினைக்கையில்; நிறையுது நெஞ்சமதே - மூங்கில்கள்

சொந்தங்கள் சேர்ந்து கூடி நகைத்ததை
சொர்க்கமாய் வாழ்வை எண்ணி திளைத்ததை
இன்முகம் கொண்டவர் இதயம் கவர்ந்ததை
இனியவர் பிரிவில் ஏங்கித் தவித்ததை
நேற்றைய நாட்களும் மறந்திடுமோ
நினைவினில் பதிந்தது அழிந்திடுமோ -மூங்கில்கள்

பனிபோர்த்த பெருவெளி

ராகம்: தர்பாரிகானடா
வரிகள்: ஜெயகரன

பனிபோர்த்த பெருவெளி
துயில்கொள்ளும் புல்வெளி
இளவேனில் தளிர்ப்பேன் என்ற
கனவோடு புல்லின் நுனி

முகம் மீது வீசி அறைந்து
உயிர் கொல்லும் கூதல் காற்று
நெஞ்சோடு நினை வுறைந்த
மனக் கதவிலே மோத
பனைவெளி ஊடே புகுந்து
வயல்வெளி வரம்பில் நடந்து
ஊர் வழி செல்லும் பாதை
சுவடோடு தொடரும் மனது

பனி வாரி ஓங்கி எறிந்து
சுழலுதே வட திசைக் காற்று
சன்னதத்தின் பேர் ஓசை
உலைகின்றதே காடு
பாதையோ மறைகின்றதே
பார்வையோ கலைகின்றதே
ஓய்ந்திட்ட காற்றின் பின்னே
பனி மேட்டில் அணிலின் சுவடு

மாறாத காலம் உண்டோ
மாறாத பருவம் உண்டோ
மாறாத நினைவில் மாந்தர்
வாழும் நிலைதான் ஏனோ
பனி நாளில் உதிர்ப்பதேன்
இளவேனில் தளிர்ப்பதேன்
சிறு செடி சொல்லும் வாழ்வை
மானிடாதொடர்ந்துசெல்லு

நள்ளிரவுச் சூரியனே

ராகம்: பந்துவராளி
வரிகள்: சேரன்

நள்ளிரவுச் சூரியனே
நடுப் பகலின் அனல் காற்றே
வெள்ளி விழுந்துதிராத வயல்காடே
வெண் நுரையே துகிலாகும் கடல் நீரே
சொல்ல ஒரு சொல் இல்லையே
சூட ஒரு பூ இல்லையே
மெல்ல எனை தாலாட்ட- மையலிலே தேன்சேர
மென் காற்றை தருவாயா

வெயில் தந்த கடவுளரும் வெளியில் இல்லை
வேப்ப மரக் கிளைகளுக்கு உயிரும் இல்லை
துயர் சுமந்த மேகங்களில் மழையே இல்லை
தூங்காத கண்களுக்கு நீரே எல்லை

பொன்னொச்சி பூத்திருந்தால் காதலாகும்
கொன்றை மரம் பூச் சொரிந்தால் தனிமையாகும்
வேனிலிலே பிரிந்து சென்ற வழியே காணோம்
வேற்று நிலக் காற்றினிலே குரலே கேளோம்

 

பனிப்பாலையே ஒரு

ராகம்: ஹம்ஸநாதம்
வரிகள்: சேரன்

பனிப்பாலையே ஒரு பெரும்பொழுது எழுகின்றதே
நினைக்காமலே பழையதுயர் புழுவாய் நெழிகின்றதே

இரவு கடலாய் பெருகிப் புரளும் நாள்- இது
ஒளியும் நிலவும் திசைகெட மறையும் நாடு இது
எல்லைப் புறத்து அருவியும் உறையும்
ஏக்கமும் தனிமையும் அலையாய் உயரும் - பனிப்பாலையிலே

சொல்லச் சொல்ல சோகம் பெருகும்
சொல்லாது இருந்த கண்கள் எரியும்
பனியின் பாதையில் பாதம் படியும்
பாடல் பிறந்து குளிரில் நடுங்கும் - பனிப்பாலையிலே

நிலத்தில் வீழ்வது பனியா பூவா
இரவின் கனவில் ஒளியா சிரிப்பா
தொலைவில் தெரிவது விடிவா வெளியா
ஒலிப்பதுவிடுதலைக்குயிலின்குரலா

துப்பிவிட்டுப் போனதே

ராகம்: திலங்
வரிகள்: செழியன்

துப்பிவிட்டுப் போனதே ஏஏஏஏஏ காற்று
துப்பிவிட்டுப் போனதே ஏஏஏ காற்று
மங்கி மறையவில்லை பகலவன் பேரொளி
பொங்கியெழுந்து மண்ணில் பிறந்த மாமனிதர்கள்
மனதினில் மின்னலெனப் பாய்ந்து பாய்ந்து
துப்பி விட்டுப் போனதே காற்று

ஓ என்று அழுத மழை ய்ய்ய்
ஓ என்று அழுத மழை
காற்று வரத் திறந்து வைத்த
யன்னல் வழி பாய்ந்து
கவிதைகளைக் கொன்றதே.
கவிதைகளைக் கொன்றதே...

இலைகளும் இரவிரவாய் அழுதன.
நிலமும்; சாட்சி...
நீளுதே கொலைஞரின் ஆட்சி

காய்ந்து கடுக்கின்ற வெய்யில் வழி மறிக்க
அண்டம் அதிர முகில் சண்டமாதுரம் செய்ய
பாட்ட மழை நனைந் தாற்றின் கரை நெடு நடந்து
அழுதும் தீராப் பெரும் துயர் கொண்டு
இறுகத் தழுவி ஓலக் கடலில் மூழ்கி எழ...
இறுகத் தழுவி ஓலக் கடலில் மூழ்கி எழ
நீரைக் கிழித்து நீல வானைப் பிளந்துண்மை
தாங்கி எழுகின்றதே காலை.

மாலையில் சாலையோரம்

ராகம்: காப்பி
வரிகள்: சொர்ணலிங்கம்

மாலையில் சாலையோரம் யாருமே இல்லாநேரம்
தேடி நீ வந்ததும் ஏனோ
காவியக் கண்ணன் போலே லீலைகள் செய்தே நீயும்
மாயமாய் சென்றது ஏனோ?

கவலையில்லாமல் சாலையில் சோலையில்
தினம் தினம் ஆடிவந்தேன்
கண்டது நாள் முதல் என்மன வானில்
கலவரம் தோன்றியதே
ஊணை மறந்தேன் உறக்கம் தொலைத்தேன்
அவனைத் தேடுதென் மனமே
ஆறுதல் கூறி ஓய்ந்தது நெஞ்சம்
அவனே என் பாதி
இது கனவில் நடந்ததா இல்லை நனவில் நடந்ததா
தவிக்கிறேன் விடையறியாது

மாலையில்

காலைப் பனியும் கதிரவன் காண
மாயமாய் மறைந்திடுமே
நாளை மீண்டும் வானம் பார்த்தே
பனியும் உறங்கிடுமே
நாளை அவனே தேடி வருவான்
என்றே ஏங்குதென் மனமே
ஆசைத் தீயை மூட்டிச் சென்றவன்
அணைப்பான் எனை அணைப்பான்
கொடும் பாலை நிலத்திலே தலை சாயும் பயிர்போலே
வாடுது என் மனம்வீணே

மாலையில்

என்னதான் உனக்குச்

ராகம்: கல்யாணி
வரிகள்: ஜெயக்குமார்

என்னதான் உனக்குச் சொந்தம் மனிதா
எந்த வழி வந்தது பந்தம்
அன்னைதான் அழைத்து வந்தாள் - உன்னை
மணமகளோ தன்னது என்றாள் - என்னதான்

ஆயிரம் கோயில் கட்டி ஆண்டவனைத் தேடுகிறாய்
மேடையில் ஏறி உனக்கே மாலைகள் சூட்டுகிறாய்
பொன்னுக்கும் ஆசை புகழுக்கும் ஆசை
நல்லதோரு வாழ்வை தொலைத்து விட்டாய்
வந்தவர் எவரும் தங்கியதில்லை
தத்துவம் அதனை மறந்து விட்டாய் - என்னதான்

ஊருக்கு நன்மை செய்யும் உயர்ந்தவனாய் மாறிவிடு
உண்மை அன்பு உள்ளம் கொண்ட உத்தமனாய் ஆகிவிடு
சொந்தங்கள் யாவும் சுற்றங்கள் யாவும்
உன்புகழ் தானே பேசிவிடும்
நல்லவர் சொல்லை கேட்டு நீ திருந்தினால்
உந்தனின் வாழ்வுக்கு அர்த்தம் வரும் -என்னதான்

விரல்கள் எழுத

ராகம்: தேஷ
வரிகள்: ஜெயக்குமார்

விரல்கள் எழுத மறந்த கவிதை
விழியில் பார்க்கிறேன்
வீணை எழுப்ப மறந்த ஒலியை
குரலில் கேட்கிறேன் - உந்தன்
குரலில் கேட்கிறேன்

இயற்கை விரித்த பசுமை உந்தன் இனிய பார்வையில்
இதயம் நிறைந்த இன்பம் உந்தன் இனிய வார்த்தையில்
தொடர்ந்து வந்த துன்பம் ஏனோ மறந்து போனது
நீ தொட்ட போதே புதிய வாழ்வு தானே தோன்றுதே

விரல்கள்

சிரித்துப் பழகி மனதைப் பறிக்கும் அழகு உருவமே
எனக்கு மீண்டும் திரும்ப வேண்டும் அந்த இழமையே
குழந்தைப் பருவம் இனிமை கலந்த அன்புச் சோலையே
நினைத்துப் பார்க்க நெஞ்சம் நிரம்பும் இன்ப ஆசையே

விரல்கள்

கார்மேகம் வருமென்று

ராகம்: சிவரஞ்சனி
வரிகள:; சபா அருள்சுப்ரமணியம்

கார்மேகம் வருமென்று
காத்திருந்த எங்களுக்கேன்
போர்மேகம் வருகின்றது
புதுப்பயத்தைத் தருகின்றது !

குண்டுபட்டுக் கண்முன்னே
கோரமாக மடிந்தவரைக்
கண்டபயம் வந்தெம்மைக்
கதிகலங்க வைக்குதையா !

செல்லடித்துக் குண்டெறிந்து
சீரழியும் தமிழினத்தின்
அல்லலுக்குக் குரல்கொடுக்க
அவனியில்யார் முன்வருவார் ?

வீடிழந்து நாடிழந்து
வீதிவீதி யாயலைந்து
வாடியெங்கும் அகதியென்று
வாழுமிந்த வாழ்வெதற்கு ?
நாளையென்ன நேருமென்று
நாளையெண்ணி வாடுகின்றோம்
வேளைவந்து எங்களுக்கோர்
விடியலிங்கு கிட்டிடுமோ ?

தொல்லையின்றி வாழுதற்கும்
சுதந்திரமாய் ஆளுதற்கும்
நல்லதொரு தலைமைபெற்றோம்
நமதுமண்ணை மீட்டெடுப்போம் !

தனிமையான இதயமொன்று

ராகம்: சாருகேசி
வரிகள்: சேரன்

தனிமையான இதயமொன்று
இனிமை வேண்டி தவிக்குதே
வெறுமையான பகலில் ரண்டு
கிளிகள் கூடத் துடிக்குதே - தனிமையான

கனிந்த காதல் நினைவினாலே
வாழ்க்கை எங்கும் விரியுமே
மனித வாழ்வே புனிதமென்று
மனங்கள் இன்று ஆடுமே - தனிமையான

மனசும் ஈரம் இதழும் ஈரம்
மறந்த மோகம் மீளுமே
கனவின் வேகம் காற்றை மீறும்
காதல் என்றும் மாயமே - தனிமையான

ஒளியின் சிறகில் இரவின் வண்ணம்
அழகு எழுதும் காவியம்
வெளியில் ஆடும் விளக்கின் மீதில்
புதிய பாடல் பிறக்குமே -தனிமையான

மழை என்றழைக்காதே... அன்பே

ராகம்: சாருகேசி
வரிகள்- கலைவாணி ராஜகுமாரன்

மழை என்றழைக்காதே... அன்பே
காலம் தவறி பொழியும் என்னை
மழை என்றழைக்காதே...
இலைகள் எல்லாம் உதிரும் காலம்
பறவை உனக்கேன் என்மேல் மோகம்
மழை என்றழைக்காதே...

கடலில் நிலவு சுடரும் அழகில்
கவிதை நதியில் கரையும் பொழுதில்
இசையில் இழைந்து நெகிழும் தருணம்
இதயம் உடைந்து சிதறும் வலியில்
தொலைவில் இருந்து அணைத்தால் போதும்
தொடரும் நினைவாய் நிலைத்தால் போதும்
இலைகள் எல்லாம் உதிரும் காலம்
பறவை உனக்கேன் என்மேல் மோகம்
(மழை என்றழைக்காதே...)

தனிமைச் சிறையில் பலநாள் கிடந்தேன்
இனிமை உலகம் எழு நீ என்றாய்
வெறுமை நிரப்பும் வித்தை கற்றாய்
அருமை என்றேன் இணைவோம் என்றாய்
கரைக்கு அலைகள் சொந்தம் இல்லை
கனவின் விடுதி விழிகள் இல்லை
இலைகள் எல்லாம் உதிரும் காலம்
பறவை உனக்கேன் என்மேல் மோகம்
(மழை என்றழைக்காதே)

மேகம் போல என்னைக் கடந்தே
போகும் ஒருநாள் வரும் என் அன்பே...
தேகம் கூடும் காதல் தேயும்
மோகம் தீர்ந்தால் விலகி ஓடும்
வாழும் காலம் வரையும் காதல்
வாழ பிரிந்தே எரிவோம் வருவாய்...!
இலைகள் எல்லாம் உதிரும் காலம்
பறவை உனக்கேன் என்மேல் மோகம்
(மழை என்றழைக்காதே)

தென்னம்பூ வாசனையும்s

ராகம்:
வரிகள்: மைதிலி

தென்னம்பூ வாசனையும் தேர்ந்தெடுத்த கவிதைகளும்
முன்னம் நூறாண்டு வாழ்ந்த முன்னோரின் நினைவுகளும்
கட்டிவைத்த பாடல்களும் பழங்கனவுகளின் தேடல்களும்
கொட்டிவைத்த கலை முழுதும் எம் குரல் தரும் குளைவுகளும்
நெட்டுயிர்க்கும் மரங்கள்தோறும் நீண்ட எம்புனைவுகளும்
நீரடித் தடங்கள் எல்லாம் எம்நினைவுகளின் புதைவுகளும்
இத்தனையும் துறந்து வந்தோம் ஏழுமலைக் கடந்து சென்றோம்
எம்இனிய திருநாளே இதைத்திருப்பி தருவாயா?

காலைவேலைகளில் கறந்த பால் குடம்தழும்பும்
கடும்பனியில் காலைகளின் கழுத்து மணி ஓசை மங்கும்
கத்திச் செல்லும் காக்கை கூட்டம் கனவுகளை பரிசளிக்கும்
எம்கலடித் தடங்கள் மீது கடும்வெயி;ல் உறைந்து போகும்
ஒற்றைநிறைப் பூவரசு ஒளிர்மஞ்சள் மலர்கள் சிந்தும்
ஒய்யார குயிலினமோ ஒன்றிசைந்து பாட்டியற்றும்
இத்தனையும் துறந்து வந்தோம் ஏழுமலை கடந்து சென்றோம்
என்னருமை திருநாளே இதைத் திருப்பி தருவாயா?

பனைமரங்கள் நிறைந்த மண்ணில் பகலிரவாய் பாடுபட்டோம்
பவளமல்லி மலர்வினிலே பசித் தூக்கம் மறந்திருந்தோம்
வயல்வெளியின் வனப்பினிலே வலிகளையும் பொறுத்திருந்தோம்
வசந்த காலம் வரும்போதெல்லாம் வரவேற்க காத்திருந்தோம்
ஒற்றைதிறை ஒளிர்வினிலே எம் ஊர்முழுதும் நனைந்திருக்கும்;
ஊளையிடும் நாய்களிர்க்கெம் ஊர்சேதி தெரிந்திருக்கும்
இத்தனையும் துறந்து வந்தோம் ஏழுமலை கடந்து சென்றோம்
இன்றைய திருநாளே இதைத் திருப்பி தருவாயா?

கடற்கரையில் நாம் பதித்த கால் தடங்கள் மறைந்திடுமோ
காதல் கொண்டு நாம் அலைந்த காலங்கள் மறந்திடுமோ
காற்று வெளியினிலே எம் கனவுகள் கலைந்திடுமோ
காத்திருந்த நாட்கள் எல்லாம் கானலுல் தொலைந்திடுமோ
பூட்டி வைத்த கடவுள் எல்லாம் புதையுண்டு போயினரோ
புன்னகைக்கும் முகங்களெல்லாம் புழுதியிள் கரைந்தனவோ
இத்தனையும் துறந்து வந்தோம் ஏழுமலை கடந்து சென்றோம்
எம்புதிய திருநாளே எதைத்திருப்பித் தருவாய் சொல்?

 

 

Difficulty reading Tamil Text?

Our site uses Tamil Unicode fonts. If you are unable to see tamil text, please download and install the following font.

Download Tamil FontGet e-mail notifications of our events, sign up now

E-mail: